Friday, January 11, 2013

நாயகன்.......

வாழ்க்கை பல விஷயங்களை நமக்குக் கற்றுக் கொடுக்கிறது.... ஒவ்வொரு வினாடியுமே நமக்கு ஒரு ஆசானாகத் தான் இருக்கிறது. நாம் தான் பல தருணங்களைத் தவற விடுகிறோம். 
தினமும் செல்லும் வழியில் நான் பல மனிதர்களைப் பார்க்கிறேன். பல குழந்தைகளைப் பார்க்கிறேன். ஏதோ ஒரு விதத்தில் அவர்கள் ஒவ்வொருவரும் எனக்கு ஒவ்வொரு விஷயத்தைச் சொல்லிச் செல்கிறார்கள்...எதிர்காலம் குறித்த கவலை இன்றி, ஒவ்வொரு நிமிடத்தையும் சந்தோஷமாய் கழிக்கின்ற குழந்தைகளைக் கடந்து செல்கையில் நான் புதிதாய் பிறப்பதாய் உணர்கிறேன். எப்போதும் நமக்குள் இருக்கும் கவலை, கோபம், குரோதம், போட்டி, பொறாமை, இன்னும் பலப் பல பூதங்கள் நம்மை யோசிக்கவே விடுவதில்லை.... ஆனால் யாரோ ஒருவர் நமக்கு இதைத் தவிரவும் உலகில் பல நல்ல விஷயங்கள் இருப்பதை மிக இயல்பாகக் காட்டி விட்டுப் போய் விடுகிறார்கள்....

இந்த புது வருடத்தில் ஒரு எளிய மனிதர் எனக்கு இப்படியான ஒரு சந்தோஷத்தைக் காட்டி விட்டுப் போனார்.....
புத்தாண்டு பிறந்து ஒன்றிரண்டு நாட்கள் மட்டுமே ஆகியிருந்தது. பணி புரியும் இடத்தின் பல எதிர்மறை விஷயங்களையும் யோசித்து எரிச்சலடையும் மனோபாவத்தை இனி ஒழித்து விடுவது என்று முடிவெடுத்து எப்போதும் நான் சிரித்துக் கொண்டிருக்க ஆரம்பித்திருந்தேன். அந்த மனிதர் வந்தார். கூட்டம் அதிகமில்லாத நண்பகல் நேரம். வாங்க ராமு தாத்தா என்றேன்.  எப்போதும் பெயர் தெரிந்தவர்களைப் பெயரிட்டே அழைப்பது என் பழக்கம். அது அவர்களுடனான நெருக்கத்தைக் கொஞ்சம் அதிகப் படுத்தும் என்பதை நான் அனுபவத்தில் உணர்ந்திருக்கிறேன். மாத்திரைகள் முடிஞ்சுப் போச்சா? ஒழுங்கா சாப்பிடுறீங்களா? எங்கே காலி அட்டை கொண்டு வந்தீங்களா/ என்று நான் கேட்டுக் கொண்டே அவருக்கான மாத்திரைப் பெட்டியை எடுத்தேன்.
 
(இது கொஞ்சம் எந்திரத்தனமாகத் தான் இருக்கிறது. ஆனால் என்ன செய்வது,அப்படித் தான் ஆகி விட்டது. தூக்கத்தில் யாராவது தட்டி எழுப்பினால் கூட காலைல ஒரு மாத்திரை, இரவு ஒரு மாத்திரை என்று சொல்ல ஆரம்பித்து விடுவேன் போலத் தான்  இருக்கு. ஹி ஹி....)

 ராமு சிரித்துக் கொண்டே கையை நீட்டி, ”புத்தாண்டு வாழ்த்துக்கள் அம்மா”, என்றபடி ஒரு சின்னப் பொதியை நீட்டினார்..   
எனக்கு ஒரு அரை வினாடி ஒன்றும் புரியவில்லை. அட, இவர் நமக்கு புத்தாண்டு வாழ்த்து சொல்கிறார்....”ஓ.. நன்றி தாத்தா, உங்களுக்கும் வாழ்த்துக்கள்... நான் எதிர்பார்க்கலை தாத்தா”, என்றபடி அந்த காகிதப் பொதியைத் திறந்தேன்.... ஐந்து சாக்லேட்டுகள்.... சட்டென்று மனசு பொங்கிற்று..... கண்கள் நீர் கோர்த்துக் கொண்டது.  ”எதுக்கு தாத்தா சாக்லேட்டெல்லாம்”,..... சிரித்தேன்.... கூட இருந்த காயூவிடம் ,”இங்கே பாருடி, தாத்தா எனக்கு ஸ்வீட் தந்திருக்கார்”,.... என்று அவளிடம் ஒரு சாக்லேட்டை நீட்டினேன்.
மெலிதாய் புன்னகைத்தார் ராமு.... ”என்னமோ உங்களுக்கு புது வருஷத்துக்கு எதுவாவது தரணும்னு தோனிச்சும்மா... தன்மையாப் பேசி, பொறுமையா எடுத்துச் சொல்லி, வியாதிக்கு மருந்து தர்றீங்க.... என் சந்தோஷத்தைக் காட்டத் தான்... நீங்க நல்லா இருக்கனும்மா.... ”,
நெகிழ்ந்து போனேன்..... பல நேரங்களில் இந்த வேலையை உதறி விடத் தோன்றியிருக்கிறது எனக்கு..  பணம் சம்பாதிக்க வழியா இல்லை? என்று மனசு வீம்பாய் துடித்திருக்கிறது. யாராவது சின்னதாய் ஒன்று சொல்வதற்குள் சீறிப் பாய்ந்திருக்கிறது.  அதை எல்லாம் தன் உன்னதமான வாழ்த்தால் ஒன்றுமில்லாமல் செய்து விட்டார் அந்த ராமு.... இது போன்ற ராமு தாத்தாக்களுக்காக நான் இன்னும் இன்னும் நன்றாக வேலை செய்ய வேண்டும் என்று எண்ண வைத்து விட்டார்.... சிறந்தப் பணியாளர் என்று அரசு விருது தந்தால் கூட கிடைக்காத பெருமிதத்தை, சந்தோஷத்தை  ஜஸ்ட் லைக் தட் கொடுத்து விட்டுப் போய் விட்டார். 
அன்பு நிறைந்த செய்கை, ஒருவரை எந்த அளவுக்கு நெகிழ வைக்கும், எத்தனை மாயங்கள் செய்யும் என்ற மிகப் பெரிய பாடத்தை இந்த வருட ஆரம்பத்திலேயே எனக்குப் புரிய வைத்த அந்த ராமு தாத்தா இந்த கட்டுரையின் நாயகன்..... 




பி.கு: உங்கள் ப்ளாக்ல புதுசா எதுவும் போடலையா? ஏன் எழுதாம இருக்கீங்க சிஸ்டர்?, எழுதுங்க என்று சொன்ன என் இனிய மேடத்திற்கும், இன்னைக்கே உக்காந்து கட்டாயம் இதை எழுதுறீங்க என்று கட்டளையிட்ட பிரிய தோழி நிலாவுக்கும் இந்த பதிவு சமர்ப்பணம்.......

8 comments:

  1. மகிழ்வும் நன்றியும் ப்ரியா... 'நாயகன்' என்ற லேபிளில் தொடர்ந்து மனம் தொட்டவர்களை எழுத வேண்டுமென உங்க ரசிக மன்ற அடிப்பொடியாய் முன் மொழிகிறேன்.(டாக்டர் வழி மொழிந்து விடுவார்)

    இச்சம்பவத்தை நீங்க சொல்லக் கேட்டு நெகிழ்ந்தாலும் உங்க எழுத்து மறுபடி மறுபடி சில இடங்களில் மனசுக்கு நெருக்கமாய்...

    அன்பு நிறைந்த செய்கை, ஒருவரை எந்த அளவுக்கு நெகிழ வைக்கும், எத்தனை மாயங்கள் செய்யும் //

    சிறந்தப் பணியாளர் என்று அரசு விருது தந்தால் கூட கிடைக்காத பெருமிதத்தை, சந்தோஷத்தை...//

    எப்போதும் நமக்குள் இருக்கும் கவலை, கோபம், குரோதம், போட்டி, பொறாமை, இன்னும் பலப் பல பூதங்கள் நம்மை யோசிக்கவே விடுவதில்லை.... இதைத் தவிரவும் உலகில் பல நல்ல விஷயங்கள் //

    ஒவ்வொரு வினாடியுமே நமக்கு ஒரு ஆசானாகத் தான்...//

    தூக்கத்தில் யாராவது தட்டி எழுப்பினால் கூட காலைல ஒரு மாத்திரை, இரவு ஒரு மாத்திரை //

    ஹஹஹஹா....

    எழுதுங்க ப்ரியா... எங்களுக்காக... உங்களுக்காக...



    ReplyDelete
  2. உங்களை ஒரு முறை அம்மா என்று கூப்பிடலாமா என்று கேட்ட அனிதாவும், உங்களை முத்தமிடலாமா என்று வாஞ்சையுடன் கேட்ட ஸ்வேதா திங்கரா , சுபத்ரா, அன்பரசி, திவ்யா இன்னும் பலரின் அன்பும் நட்பும் தான் நான் என் பணியை எவ்வளவு நெருக்கடியிலும் தொடர ஊக்கமாகிறார்கள் . நெகிழிச்சியான பதிவு. பெருகிற்று என் ஞாபக ஊற்றும் .

    ReplyDelete
  3. தங்களின் வலைப்பூவை இன்று வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தியுள்ளேன் என்பதை மகிழ்வுடன் தெரிவித்துக்கொள்கிறேன்.
    http://blogintamil.blogspot.com

    ReplyDelete
  4. அக்கா
    ராமுதாத்தா என்று அவரை மரியாதையுடன் கூப்பிட்டுவிட்டு கதையில் அவரை 'ராமு' என்று ஏகவசனத்தில் கூப்பிடுவது சற்று வித்தியாசமாக இருக்கிறது எனக்கு. உனக்கு?

    என்னக்கா, எழுதுவதே இல்லையா? ஜனவரி 11க்கு பிறகு ஒன்றுமே இல்லையே... நிறைய எழுதுக்கா. தினமும் 'எழுத' என்று ஒரு நேரம் ஒதுக்கு.
    "சொல்லுதல் யார்கும் எளிய அறியவாம்
    சொல்லிய வண்ணம் செயல்"
    என்று தெரியும், இருந்தாலும் ஒரு ஆதங்கத்தில் சொன்னேன்.

    ReplyDelete
  5. அன்பின் நெகிழ்வை உணரும் போதுதான் புரியும் அதை விட சிறந்ததாக உலகில் எதுவுமில்லை என்று! அன்பாய் இருப்போம்!

    ReplyDelete
  6. நல்லா இருக்கு ப்ரியா. எழுதுனா ஒன்றும் குறைந்து போகாது.

    எழுதும்மா தொடர்ந்து.

    ReplyDelete

  7. வணக்கம்!

    அரியதோர் ஆக்கம்! அகமே ஒளிர
    உரியதாய்க் கொண்டால் உயா்வு!

    கவிஞா் கி. பாரதிதாசன்
    பிரான்சு

    ReplyDelete
  8. முதன் முறையாக தங்களின் வலைப் பக்கம் வந்தேன்.நெகிழ்வான பதிவு. இந்த அவசர கால உலகில் இது போன்ற அன்பின் வெளிப்பாடுகள் தான், நம்மை மேலும் மேலும் உற்சாகப் படுத்தியும், ஊக்கப் படுத்தியும், சோர்வின்றி இயங்கச் செய்கின்றன.

    ReplyDelete